திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு: பக்தர்கள் அதிர்ச்சி | Tiruchendur temple elephant attack 2 killed: Devotees shocked

1340159.jpg
Spread the love

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார்.

இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் இன்று மாலை 3.10 மணியளவில் யானை அருகே நின்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. இதனை கண்ட உதயகுமார் தடுக்க முயன்றுள்ளார். இதனால் இருவரையும் யானை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தண்ணீரை பீச்சியடித்து சாந்தப்படுத்தப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை.

படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது உயிரிழந்தார். கோயில் யானை 2 பேரை தாக்கி கொன்றுவிட்டதை அறிந்த பக்தர்கள் பீதியடைந்து ஓடினர். இதுகுறித்து அறிந்ததும் யானையின் தலைமை பாகனான ராதாகிருஷ்ணன் அங்கு வந்து யானை மீது தண்ணீரை பீச்சியடித்து அதனை சாந்தப்படுத்தினார். தொடர்ந்து யானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் கம்பி வலை போடப்பட்ட அறைக்குள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தலைமையில், திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் உள்ளிட்ட வனத்துறையினர், டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் உள்ளிட்ட கால்நடை மருத்துவ குழுவினர் அங்கு வந்து யானையை பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும், யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பிறகே யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிகார பூஜை: இதற்கிடையே கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *