இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான “திருட்டு பைக்’ என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை இன்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்” என்றார்.