செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் சூரஜ், வேலைக்காக சென்னைக்கு வரவில்லை. அவர் சும்மா வந்திருக்கிறார். மேலும், கடந்த ஒன்றரை மாதமாக சென்னை லோக்கல் ரயிலில் சுற்றி வந்திருக்கிறார். அப்படியாகத்தான் கடந்த 28ஆம் தேதியும் திருத்தணி நோக்கி ரயிலில் வந்துள்ளார்.
அப்போது அந்த ரயிலில் ஏறிய நான்கு சிறுவர்கள், அவரை மிரட்டியுள்ளனர். இதற்கு வடமாநில இளைஞர் என்பதன் பின்னணி எதுவும் இல்லை. கொடுக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தின்படி, சிறுவர்களை அந்த இளைஞர் முறைத்துப் பார்த்துள்ளார். அதில் இருந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் திருத்தணியில் அந்த இளைஞரை ரயிலில் இருந்து இறக்கி இந்தக் கொடூர சம்பவத்தை செய்துள்ளனர். அன்றே (28ஆம் தேதி) ஐந்து தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டு, அந்த நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் திருத்தணி பகுதியையும், இருவர் அரக்கோணம் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
நான்கு சிறுவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு, பழைய சட்டத்தின்படி ஐபிசி 307 தற்போது அது பிஎன்எஸ் 109 பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 28ஆம் தேதியே சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடத்தில் இருந்து இரண்டு பட்டாக்கத்திகளும், இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நான்கு சிறுவர்களில் மூவர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். ஒருவர் மட்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபருக்கு முதலில் திருத்தணி மருத்துவமனையிலும், பிறகு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட நபர் தனது சொந்த ஊருக்குச் செல்வதாக தெரிவித்ததை அடுத்து, அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்கள் எந்த வகையான போதைப் பொருளை உட்கொண்டார்கள் என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். அதற்கு நேரம் எடுக்கும். தற்போதுவரை குறிப்பிட்ட இந்தப் போதை பொருள் தான் உட்கொண்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் இதுபோல் வெளியாகும் காணொளிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்துவருகிறது. அதேசமயம், பல வழக்குகளில் சிறுவர்களாக இருப்பதால், அவர்களது எதிர்காலம் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களது பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பும் நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.