இதுகுறித்து பூபதியிடம் விளக்கம் கேட்டதற்கு, “நகராட்சி நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. இந்த விவகாரத்தில், பழைய பேருந்து நிலையமான அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்படும். புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அரசாணை பிறப்பித்து சூட்டியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு? அரசியல் லாபத்துக்காக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.
“டைப்பிங் மிஸ்டேக்…”
– நா.த.க-வின் ‘அடடே’ விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி பேருந்து நிலைய பெயர் சர்ச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘திருத்தணி பேருந்து நிலையத்துக்கு மா.பொ.சிவஞானம் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரா?’ என கொந்தளித்திருப்பது இவ்விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ‘எல்லை காத்த மாவீரர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பெயரில் திருத்தணி நகரில் அமைந்திருந்த பேருந்து நிலையத்தின் பெயரை, கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்ற முயல்வது எதேச்சதிகாரத்தின் உச்சம். தி.மு.க அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்’ என்றெல்லாம் எச்சரித்துள்ளது.
இந்தப் பெயர் குழப்பம் குறித்து நா.த.க தலைமை நிலையச் செயலாளர் செந்திலிடம் விளக்கம் கேட்டபோது, “கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கையில் டைப்பிங் மிஸ்டேக்காக(?!) ‘மா.பொ.சி பேருந்து நிலையம்’ என அச்சடித்து விட்டார்கள். அதே நேரத்தில் கருணாநிதி பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பது ஏற்புடையதல்ல. திருத்தணியை மீட்டெடுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மா.பொ.சி-யின் பெயரை புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும்” என்றார்.