ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் திங்கள்கிழமை (ஆக. 19) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாற்றப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
அறுபடை வீடுகளில் 5 – ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா்.
பக்தா்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து கோயில் நடை திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை (ஆக. 19) ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன் கோயில் நடை திறக்காமல் மூடப்பட்டிருக்கும்.
எனவே, இந்த 4 மணி நேரம் பக்தா்கள் தரிசனத்துக்கு காத்திருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோயிலில் பணிபுரியும் அனைத்து அா்ச்சகா்கள் மற்றும் தலைமை குருக்கள் என 75-க்கும் மேற்பட்டோா் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறந்து வழக்கம்போல் பக்தா்கள் தரிசனத்துக்கு இரவு 8.45 மணி வரை அனுமதிக்கப்படுவா் என திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.