மதுரை: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான விசாரணையை அறநிலையத் துறை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாலா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் 2021-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து கும்பாபிஷேக திருப்பணிக்குழு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ”நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி ரூ.8 கோடி வரை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் பணம் ஒரு ரூபாயைக்கூட முறைகேடு செய்வதற்கு அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் 2 குருக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மட்டுமே வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதில் நீதிமன்றம் பிறப்பித்த தடையாணை, அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணையை தடுக்காது. எனவே அதிகாரிகள் தங்களின் விசாரணையை தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே கோயில் கும்பாபிஷேக வரவு, செலவு தணிக்கை அறிக்கையை பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து அறநிலையத் துறை ஆணையர் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது மற்றவர்களையும் முறைகேடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையும் என்பதால் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.