திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரில் 30 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதாக, உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருநின்றவூரை சேர்ந்த வாசகர் பி.டி.சுப்பிரமணியன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: திருநின்றவூர் நகராட்சியின் 8-வது வார்டு, வடக்கு பிரகாஷ் நகரில் சேரன், சோழர் மற்றும் பாண்டியன் ஆகிய தெருக்கள் உள்ளன. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தற்போது நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் உள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி தெருக்களின் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மண்சாலையாக உள்ளது. இதனால், மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருநின்றவூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், சாலைகளின் தரம் உயரவில்லை.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.