சிறிது காலம் கழித்து மித்ரசகா தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்நிலையில் ஒருநாள் மித்ரசகா பரமபதம் அடைந்தான். சந்திரமாலினி மிகவும் வருந்தினாள். கணவனின்றி வாழவே பிடிக்காமல் நதியில் குதித்தாள். அப்போது அவளை ஒரு முதியவர் ரூபத்தில் வந்த பெருமாள் காப்பாற்றினார். சந்திர மாலினி தன்னைக் காப்பாற்றியவர் யார் என்று பார்த்தபோது அங்கே பெருமாள் காட்சி கொடுத்தார். சந்திரமாலினிக்கு இன்னும் விதி முடியவில்லை என்பதை உணர்த்தி அவளுக்கு மந்திர உபதேசம் செய்து உரிய காலத்தில் தன்னை வந்து சேர அறிவுருத்தி மறைந்தார்.
அந்த இடத்திலேயே தியான ஆசிரமம் அமைத்து (இந்த இடத்தில்தான் திருக்கோயில் அமைந்துள்ளது), பூஜை செய்து வாழ்ந்தாள் சந்திரமாலினி.
ஒரு மாசி மாதத்தின் வளர்பிறை துவாதசி திருநாளில், பிரம்மமுகூர்த்த வேளையில் நதியில் நீராடிவிட்டு வந்த சந்திர மாலினி ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்து, மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாள். அப்போது வானில் சூரியகோடிப் பிரகாசத்துடன் ஓர் ஒளி தோன்ற, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங்களும் ஒன்றிணைந்த கோலத்தில் அவளுக்குக் காட்சி தந்தார் பகவான். மேலும் அவளிடம், ‘‘வேண்டும் வரம் என்ன?’’ என்றும் வினவினார்.

“தசாவதாரங்களையும் தரிசித்துவிட்டபின் தனக்கு வேண்டுவது ஏதுமில்லை. தங்கள் திருவடியே போதும். ஆனாலும் இந்த தாமிரபரணியில், இந்த தீர்த்தக் கட்டத்தில் நீராடி, யாரெல்லாம் தங்களின் பத்து அவதாரங்களையும் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு சாபவிமோசனமும் பாவவிமோசனமும் அருள வேண்டும்” என்று வேண்டினாள்.
பெருமாளும் அவ்வண்ணமே அருளே அங்கே பத்து அவதாரங்களும் கொண்ட சந்நிதி உருவானது என்கிறது தலபுராணம்.
சந்நிதிச் சிறப்புகள்
தாமிரபரணியின் கரையில் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். மூலவர், அஞ்சேல் தசாவதாரப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். சந்திர மாலினிக்கு ‘அஞ்சேல்’ என அபயம் அளித்ததால் இப்படியொரு திருநாமம் ஸ்வாமிக்கு. பெருமாள், முதலில் தேவியர் இல்லாமல் காட்சியளித்து, அதன் பிறகே தசாவதாரக் கோலங்களைக் காட்டி அருளினார் என்பதால், இத்தலத்தில் தேவியருடன் இல்லாமல் தனியாகவே காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் அரசமரம். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் கல்யாண ஸ்ரீநிவாஸராக அருள்கிறார்.