திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில், அன்புள்ள பவன் கல்யாண். நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் இந்த பிரச்னை நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்னையை ஏன் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் 3 லட்சம் லட்டு, ரூ.500 கோடி ஆண்டு வருவாய்! எரியும் நெய் பிரச்னை?
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில், “திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.
மேலும், இது கோவிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய அளவில் கோவில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது. தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும்.
சநாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.