திருப்பதி லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார்.
திருப்பதி திருமலையில், லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது, கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி!
இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.
இதையும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் விழாவில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டதா? – அர்ச்சகர் தகவல்!
இதைத் தொடர்ந்து, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திருப்பதி திருமலை கோயில் பிரசாதத்தில் விலங்குகளின் இறைச்சி மற்றும் பிற அழுகிய பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி கோயில் லட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.