திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம் -மக்கள் அச்சத்தில் காத்திருப்பு | Tirupattur Jalagambarai bus stop lies in dilapidated state! Will government take action?

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக அப்பகுதிக்குச் சென்று பார்க்கும்போது, உள்ளூரின் முக்கிய போக்குவரத்து மையமாகச் செயல்பட்டு வரும் இந்தப் பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து, பாராமரிப்பின்றி அசுத்தமாகக் காணப்படுவதோடு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையிலே இருக்கிறது.

குறிப்பாக கோவிலூர், கிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை எனச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பல்வேறு மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் தினசரி இப்பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பேருந்து நிறுத்தமானது கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக இதே மோசமான நிலையில்தான் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் சுவர்கள் உடைந்து, மேல்சுவர் பலவீனமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்குச் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் அதிகரிக்கிறது.

மோசமான சுவர்

மோசமான சுவர்

சுற்றுப்புறத்தில் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரப் பிரச்னைகளும் உருவாகி வருகின்றன. உட்காரும் வசதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகே இருந்த இதேபோன்ற ஒரு பேருந்து நிறுத்தம் இடிந்து விழுந்த சம்பவம், இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது. அதேபோன்ற விபத்து இங்கும் நடைபெறலாம் என்ற அச்சத்தில் மக்கள் தினசரி உயிர் பயத்துடனே அப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *