நீதிமன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும், கோவில் நிர்வாகத்தினர் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இந்து அமைப்பினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனால் காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.

இந்த பதற்றமான சூழலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்றச் செல்லாம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அதிதீவிரம் காட்டி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.