விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவான நிலையில், இராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன், மேற்படி பிரச்னைக்குரிய மலையில் அமைந்துள்ள அந்தத் தூண் தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல; அது ‘தி.ஓட் லைட் ஸ்டோன்’ எனப்படும் சர்வே கல் எனக் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் அளித்த பேட்டியில் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கல்லானது தீபக் கல் என நாளிதழ்களில் வெளியாகி இருப்பதை தான் பார்த்தேன். அது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அக்கல்லில் உள்ள சர்வே குறியீடுகளை வைத்து பார்க்கும் போது அது நில அளவை கல் தான் எனக் கூறியுள்ளார்.
வாஞ்சிநாதன் கூறுவதை வைத்து பார்க்கும் போது மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அவர் சொன்ன குறியீடுகளுடன் இருக்கும் கல்லானது கண்டிப்பாக நில அளவை கல்லாக தான் இருக்க முடியும்” என்று கூறினார்.