திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கின் விசாரணையின்போது, ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலேயே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் தவறாக நினைக்கும் பட்சத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதற்கும் தயார்’ என, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, `திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக் கொள்ளலாம்’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
அதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அரசு தரப்பில், `நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் 5 நபர்களை தீபம் ஏற்ற இருக்கும் தூணில் பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக முடிவு செய்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிய நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், `அவ்வாறு அனுமதிப்பதில் என்ன சிக்கல்?’ எனக் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், `நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழக்கிற்கான அதிகாரத்தைக் கடந்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தரப்பில், `தீபம் ஏற்றுவதற்கு அரசு போதுமான ஏற்பாடுகள் செய்து தரவில்லை. அதற்காகவே அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், `நீதிமன்ற உத்தரவு விவரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும், 5 நபர்களை பரிந்துரைப்பதில் பிரச்சனை எனில், கோயிலே பூஜை செய்யலாமே? சிறிய விஷயம், அதைச் செய்து பிற பிரச்னைகளைத் தவிர்க்கலாமே?’ எனவும் கருத்து தெரிவித்தனர்.