தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதது குறித்துப் பேசியவர், “இப்பொழுது திடீரென்று திருபரங்குன்றத்திலே கார்த்திகை தீபத்தை ஒட்டி ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு நீதி அரசர்கள் பவானி சுப்பராயன் அவர்களும் நீதி அரசர் கல்யாண சுந்தரம் அவர்களும், “எந்த இடத்திலே வழக்கப்படி கார்த்திகை தீபத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதே இடத்திலேயே தான் ஏற்ற வேண்டும்’ என ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டிலே நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். 2014ம் ஆண்டு இரண்டு நீதிபதிகளின் டிவிஷன் பென்சால் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யாமல் புதிதாக ஒரு ஒற்றை நீதிபதி தீர்ப்பளித்து, வழக்கத்தை மாற்ற வேண்டுமென்றால் அதை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 2014ம் ஆண்டு தீர்ப்பின்படி நடந்துகொள்கிறோம்.” எனப் பேசினார்.