அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். ‘கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது…’ என்று அவர் கேட்கவும், ‘அமைப்புரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. 62 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்றிருக்கிறார் அண்ணாமலை.

‘கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை…’ என்று பி.எல்.சந்தோஷ் கேட்கவும், ‘எந்த அடிப்படையில் என்னை அங்கு வரச் சொல்கிறீர்கள்… கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும்கூட, ஒரு காரியகர்த்தாவாக என் பணியை நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
கோவாவிலும் கேரளாவிலும் நீங்கள் கொடுத்த பணிகளை முகம் சுளிக்காமல் செய்து முடித்திருக்கிறேன். ஆனால், என் ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கி வருகிறார் நயினார் நாகேந்திரன். கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முதல் நாள்கூட, என் ஆதரவாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அதைச் சொல்வதற்காக உங்களை நான் தொடர்புகொண்ட போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை. மரியாதை இல்லாத நிலையில், நான் எப்படி வருவது…’ என்று சந்தோஷிடம் பொங்கியிருக்கிறார் அண்ணாமலை.