திருப்பரங்குன்றம்: "வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்"- பா.ரஞ்சித்

Spread the love

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம், மாநில அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.

இதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மீண்டும் உத்தரவிட்டதையடுத்து, தமிழக அரசு அந்த உத்தரவுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவோடு இரவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இரண்டு நாள்களில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம்

இவற்றுக்கு மத்தியில், “மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயல்கின்றன. 2014-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்கமாக எங்கு தீபம் ஏற்றப்படுமோ அங்குதான் தீபம் ஏற்றப்படுகிறது.

அந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யாமல் தனியாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி வாங்கினால் அதை எப்படி நிறைவேற்றுவது” என அமைச்சர் ரகுபதி நேற்று விளக்கமளித்தார்.

மறுபக்கம், பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பைத் திரித்து அமைச்சர் பொய் சொல்கிறார். மத மோதலை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுதான் முயல்கிறது” என இன்று விமர்சித்திருக்கிறார்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. ரஞ்சித், “சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல்.

இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *