திருப்பரங்குன்றம் விவகாரம்: பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி – நிபந்தனை என்னென்ன? | Thiruparankundram issue: High Court allow protest in Pazhanganatham area

1349566.jpg
Spread the love

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களைத் தவிர்க்கவும், ஆர்ப்பாட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உயர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் 16 கல் மண்டபம் முன்பு இன்று (பிப்.4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இப்பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையுத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று காவல் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மலை கோயிலில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. மலையில் கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசுத் தரப்பில், அது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினர். மனுதாரர்கள் தரப்பில், “ஆர்ப்பாட்டத்தை இன்றே நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தை வேறு இடத்தில் நடத்திக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு காவல் துறை தரப்பில், திருப்பரங்குன்றத்தில் விழா நடந்து வருகிறது. எனவே, வரும் 19 அல்லது 20-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பலர் மதுரை வந்துள்ளனர். எனவே, இன்றைய தினமே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டது.

“இந்த ஆர்ப்பாட்டத்தில் எவ்வளவு பேர் கலந்துகொள்வார்கள்” என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மனுதாரர்கள் தரப்பில் ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என பதில் அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய முழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அரசுத் தரப்பில் தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் பழங்காநத்தத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல” என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு அரசுத் தரப்பில் மத ரீதியான பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதற்காகவே தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கின் இடையீட்டு மனுதாரர், “ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்துக்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவது சட்டவிரோதமானது. அதேபோல், மலையின் உச்சியில் அமைந்துள்ள தர்காவில், அவர்களது வழிபாட்டு வளாகத்தில்தான் பிரியாணியை சாப்பிட்டுள்ளனர்” என்று கூறப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சரியா, அந்த நடவடிக்கை தேவையானதா என்பது மட்டுமே இந்த வழக்கு” என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசித்து தகவல் தெரிவிக்க நாளை (பிப்.5) வரை கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடத்த வேண்டும். இதில், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, தேவையற்ற முழக்கங்களோ எழுப்பப்படாது என்பதை மனுதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றனர். இன்று மாலை 4 மணிக்கு, பழங்காநத்தம் பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்புக்கு உட்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். வெறுப்பைத் தூண்டு முழக்கங்களை எழுப்பக் கூடாது. இந்த ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *