திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு ரத்து : 7 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் : நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் – Kumudam

Spread the love

திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது: “தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை; ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.” நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதியிடம் அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது.

அப்போது உடனே காணொலியில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். “சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; உடனே ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காணொலி வாயிலாக மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்.

அப்போது, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “3.30 மணி முதல் பேரிகாடுகளை போட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம்” என்று அவர் கூறினார். அப்போது, “144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு எப்போது பரிந்துரை செய்தீர்கள்?” என்று நீதிபதி கேட்டார். இதற்கு, “மாலை 5.45 மணியளவில் பரிந்துரைக்கப்பட்டது” என்று காவல் ஆணையர் கூறினார். மேலும், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது, நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல” என்றும் காவல் ஆணையர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். தீபமேற்ற காவல் ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார். மேலும், திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ரத்து செய்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.10 பேர் மட்டும் மலை உச்சுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும். காவல் ஆணையர் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *