திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கட்சியின் 7 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அப்கிரேடு ஆகியிருக்கிறார். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்பு துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். அதைத்தான் சாமிநாதன் மூலம் நேர் செய்திருக்கிறது திமுக தலைமை என்று சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு சில விவகாரங்களும் இருக்கின்றன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் திமுக நிர்வாகிகள் சிலர், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான், காங்கயம், தாராபுரம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக மு.பெ.சாமிநாதனும் அவரது தீவிர ஆதரவாளரான இல.பத்மநாபன் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதில், இல.பத்மநாபன் நியமனத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. வெளியூர்க்காரர் என்று சொல்லி அவருக்கு எதிராக திரண்ட ஒன்றியச் செயலாளர்கள் சிலர், அவரை மாற்றக் கோரி கையெழுத்து இயக்கமே நடத்தினார் கள். தலைமைக் கழகத்தில் நடந்த ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்ச்சியிலும், பத்மநாபனை மாற்ற வேண்டும் எனச் சொல்லி கட்சி நிர்வாகிகள் சிலர்தலைவர் ஸ்டாலினிடம் கடிதமும் கொடுத்தனர். இருந்த போதும், அமைச்சர் சாமிநாதனின் பரிந்துரை என்பதால் பத்மநாபனை உடனடியாக மாற்றுவதற்கு சற்று யோசித்தார் தலைவர்.
இந்த நிலையில், தான் சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் புரமோஷன் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை இல.பத்மநாபனுக்கு தந்து சிக்கலை சமாளித்திருக்கிறார் தலைவர். என்றாலும், இந்தத் தேர்தலில் பத்மநாபனுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இவரது மாவட்டத்துக்குள் வரும் காங்கயம் தொகுதி அமைச்சர் சாமிநாதன் போட்டியிடும் தொகுதி. தாராபுரம் தனித் தொகுதி என்பதால் அங்கும், தன்னால் போட்டியிட முடியாது என்பதால் இப்போது மதில் மேல் பூனை கணக்காகிவிட்டார் பத்மநாபன்” என்றனர்.
இது ஒருபுறமிருக்க, இல.பத்மநாபன் வகித்து வந்த தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பொள்ளாச்சி எம்பி-யும், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளருமான கே.ஈஸ்வரசாமியை நியமித்திருக்கிறது தலைமை. இவர் அமைச்சர் அர.சக்கரபாணியின் தீவிர ஆதரவாளர் என்கிறார்கள். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு மண்டலப் பொறுப்பாளராகவும் சக்கரபாணி இருப்பதால் அவர் சொல்லும் நபருக்கே மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிடலாம் என மு.பெ.சாமிநாதனே ஸ்டாலினிடம் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். சக்கரபாணி கைகாட்டும் நபருக்கே உடுமலை, மடத்துக்குளம் சீட்கள் கன்ஃபார்ம் ஆகும் என்பதால், சீட் கனவில் மிதப்பவர்கள் இப்போது அவரைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.