கூட்டணி என்பது தற்காலிகமானது. அரசியலை புனிதமாக மாற்றுவதற்காக அல்ல, தங்களை தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்வதற்காக. அப்படிப்பட்ட கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் போக்கு மேலும் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
“கடவுள் அமைத்து வைத்த மேடை…இணைக்கும் கல்யாண மாலை.. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று…” – திருமணம் தொடர்பாக கவியரசர் எழுதிய மிகச் சிறந்த பாடல். யார் யார் இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையவேண்டும் என்பது என்றோ இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அதில் சொல்லியிருக்கிறார்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான ஒரு பந்தத்தை அரசியலில் அமைக்கப்படும் கூட்டணியோடு எப்படி உதாரணமாக சொல்ல முடியும். வாழ்க்கை கூட்டணி நிரந்தரமானது. அரசியல் கூட்டணி தேர்தல் முடிந்து முடிவுகள் தெரியும் வரையில் மட்டுமே. அதன் பிறகு தொடரலாம்… தொடராமலும் போகலாம்.
அடுத்த தேர்தலில் வேறு கூட்டணி மாறலாம். இதுதான் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
‘அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே’ பாடலில் மிகப்பெரிய மனிதன் ஒருவன் தாலி மூலமாக ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்ன்னு காட்டி இருப்பார்கள்.
அந்த உயரமான ஒன்றை..(அதுவும் கட்சியின் நிறுவனர் நடித்த மிகச்சிறந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ) சாதாரண அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது சரியல்ல.
விஜயகாந்த் கட்சியை எதற்காக தொடங்கினாரோ அதுவே சிதைந்து போகும் அளவுக்கு வேலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.