குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்வதற்கு விண்ணப்பித்தால், அது குறித்து அந்த ஜோடியின் பெற்றோருக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குள், வாட்ஸ்அப் எண் அல்லது மெசேஜ் மூலமாகத் தெரிவிக்கப்படும்.
திருமணப் பதிவுக்கு ஆதார், திருமணப் பத்திரிகை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஆதார் போன்றவையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும்.
மேலும், திருமணப் பதிவு விண்ணப்பம் கொடுத்த உடனே திருமணச் சான்றிதழ் கிடைக்காது. 30 நாள் இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், திருமணப் புகைப்படங்கள், மற்ற சாட்சிகளின் விவரங்கள் அரசின் இணையத்தில் பதிவேற்றப்படும். குடும்ப ஆவணங்களில் குடும்ப விவரங்கள் நேரடியாக இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, “பெற்றோரின் உணர்வுகளையும், குடும்ப அமைப்பையும் பாதுகாப்பதே இந்தப் புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம். பல்வேறு சமூக அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன” என்றார்.
இந்தத் திட்டம் இன்னும் சட்டமாகவில்லை. தற்போது இது பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு உடன்பாடு இருந்தாலும், தனிமனித உரிமை மற்றும் ரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகச் சிலர் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எனவே, 30 நாள் கருத்துக் கேட்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.