பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயதான பெண் மருத்துவரும், 30 வயது இளைஞர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, மருத்துவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்த அந்த நபர், தனது காதலியுடன் பல முறை தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இரண்டு முறை தான் கர்ப்பம் தரித்த அந்த பெண், அதன்பின் கர்ப்பத்தை கலைத்தும் உள்ளார்.
ஒரு கட்டத்தில், திருமணம் செய்யாமலே கணவன் – மனைவி போல இருவரும் பழகி வந்ததால், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தன் காதலனை வற்புறுத்தியுள்ளார் மருத்துவர். இதனை தட்டிக் கழித்து வந்த அந்த இளைஞருக்கு இறுதி வாய்ப்பாக, நேற்று (ஜூலை 1) பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென காலக்கெடு விடுத்துள்ளார். இதற்காக சார்பதிவாளர் அலுவலகம் வர வேண்டுமென தன் காதலனை மருத்துவர் கட்டாயப்படுத்தியும் உள்ளார்.
இந்த நிலையில், சம்பவ நாளன்று வெகுநேரமாகியும் பதிவுத் திருமணம் செய்ய வராத காதலனால் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்ட மருத்துவர், மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது காதலனை தொடர்புகொண்ட அவர், வழக்கம்போல தன்னை சந்திக்க தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு வருமாறு அன்புக் கட்டளை விடுத்துள்ளார். அங்கே மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பெண் மருத்துவர், அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் பிறப்புறுப்பை அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் வெட்டி அறுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு மயக்கத்திலேயே ரத்தம் உடலிலிருந்து வெளியேறியுள்ளது.
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்திருந்த அந்த பெண் மருத்துவர், உடனடியாக காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரிடமிருந்த கத்தியை கைப்பற்றியதுடன் பெண் மருத்துவரை கைது செய்தனர்.
மருத்துவமனையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை உடனடியாக சாப்ரா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக, பிகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே அந்த நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.