சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராய்கட்டில் ஹோட்டல்கள் நடத்தி வருபவர் தீபக் தண்டன். இவருக்கும் போலீஸ் அதிகாரி கல்பனா சர்மாவுக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகம் ஏற்பட்டது.
திருமணமானவரான தீபக் தண்டனுடன் கல்பனாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தீபக்கை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.2 கோடி பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் யுனோவா காரை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக தீபக் குற்றச்சாட்டுச் செய்துள்ளார்.
அதோடு, ராய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலை தனது சகோதரர் பெயருக்கு மாற்றிக்கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் ரூ.30 லட்சம் செலவு செய்து அந்த ஹோட்டலை கல்பனா வர்மா பெயருக்கு எழுத்துப்பூர்வமாக மாற்றிக்கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “தான் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கில் சிக்க வைத்துவிடுவேன்” என்று தன்னை மிரட்டுவதாக தீபக் போலீசில் புகார் செய்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுக்கு சாட்சியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்துள்ளார்.