இன்னொருபுறம், நாயகியின் காதலனாக ஜான் கொக்கேன் வருகிறார். நிச்சயதார்த்தம் வரை செல்லும் திருமணச் சடங்குகள் திடீரென முறிவதால் செயற்கை கருத்தரித்தல் மூலம் நித்யா மேனன் கர்ப்பமடைவது படத்தின் முக்கியமாக திருப்புமுனையாக அமைகிறது.
காதலில் முறிவைச் சந்தித்த கதாநாயகனும் கதாநாயகியும் விதிவசத்தால் ஏதோவொரு தருணத்தில் சந்திக்க நேரிடுகிறது. அப்போதிருந்து இருவருக்குமிடையே ஈர்ப்பு ஏற்படுகிறது. இரு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட இருவர் வாழ்க்கையில் இணைவார்களா? செயற்கை கருத்தரித்தல் குழந்தை பெற்றெடுக்கும் நித்யா மேனன், தனியொரு பெற்றோராக அந்த குழந்தையை அவர் வளர்த்தெடுப்பதை இந்த சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்? இது சாத்தியமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிளைமாக்ஸில் தெரிய வருகிறது.
அதனைத்தொடர்ந்து கதை அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறது. ரவியின் நண்பராக வரும் வினய் நெடுநாள் கழித்து திரையில் தோன்றினாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அதற்கு, அவரது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதுதான்.
ஓரினச் சேர்க்கையாளராக தான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளதற்கு வினய்க்கு பாராட்டுகள். அப்படியானால், இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியுமா? என்றால் நிச்சயம் பார்க்கலாம்.
வெளிப்படைத்தன்மையுடன் படத்தில் என்ன காட்ட வேண்டுமோ அதை நேர்த்தியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி சீர்திருத்தம் ஏற்படுத்த முயற்சித்திருக்கும் கிருத்திகாவுக்கு வாழ்த்துகள்.
ரவியின் இன்னொரு நண்பராக வரும் யோகி பாபு கலகலப்பை முடிந்தளவுக்கு வரச் செய்திருக்கிறார்.
இன்றைய கால இளைஞர்களுக்கு ஏற்றவாறு கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு பலம்தான்.
அதற்காக ஏ செண்டர் ரசிகர்கள்தான் இந்த படத்தை விரும்புவார்களா? என்றால் இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த மாதிரி படம் எடுக்கப்பட்டுள்ளது.