நாடு முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில், இப்போது 18 வயதை கடந்த ஆண்கள், பெண்கள், வேலை நிமித்தமாக நகரங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். எனினும் இது போன்ற உறவுகளுக்கு சில மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின. உத்தரப்பிரதேசத்தில் அது போன்று திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தங்களது உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடகோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு நீதிபதி விவேக் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இம்மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, `திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் இந்த சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. திருமணம் செய்யாமல் விருப்பப்பட்டு சேர்ந்து வாழும் 12 தம்பதிகளுக்கு உடனே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அவர்கள் திருமண வயதை எட்டிவிட்டார்களா என்பதை வயது ஆவணங்களை வைத்து சரி பார்க்கவேண்டும். திருமண புனிதத்தை விட வாழும் உரிமை மிகவும் முக்கியம்.

நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது
திருமண வயதை கடந்தவர்களான மனுதாரர்கள், திருமணத்தின் புனிதம் இல்லாமல் ஒன்றாக வசிக்க முடிவு செய்துள்ளனர், மேலும் அவர்களின் இந்த முடிவின் மீது நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. மனுதாரர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்றால், பாதுகாப்பு கேட்பதற்கான அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூற முடியாது. சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்றுக்கொள்கிறதா என்பதை விட, அவர்களை அரசியலமைப்பு பாதுகாக்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களிடையேயான பார்வையில் அறநெறி மாறுபடலாம், ஆனால் இந்த வேறுபாடுகளால் சட்டப்பூர்வமானது பாதிக்கப்படாது. குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம், 2005 இன் கீழ் கூட, குடும்ப உறவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின் கீழ் “மனைவி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை, சட்டப்பிரிவு 21 (வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்) இன் கீழ் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதையும்” நீதிபதி தன் உத்தரவில் சுட்டிக்காட்டினார்.