திருமயம் அருகே பரிதாபம்: கார் – சரக்கு ஆட்டோ மோதியதில் 4 பேர் உயிரிழப்பு | Tragedy near Thirumayam 4 killed in car and auto collision

1353608.jpg
Spread the love

புதுக்கோட்டை: திருமயம் அருகே காரும், சரக்கு ஆட்டோவும் நேற்று மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் காவிரி நகரைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன்(65). இவர், மனைவி அருணா(60), மருமகள் ரம்யா(45), பேரக் குழந்தைகள் குழலினி(10), மகிழினி(4) ஆகியோருடன் நேற்று காரைக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை செந்தமிழச்செல்வன் ஓட்டினார்.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸார் மற்றும் திருமயம் தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், செந்தமிழ்ச்செல்வன், அருணா, லோடு ஆட்டோவில் பயணித்த இலுப்பூர் பின்னங்குடியைச் சேர்ந்த சுதாகர்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ரம்யா, குழலினி, மகிழினி, லோடு ஆட்டோ ஓட்டுர் திருக்கோகர்ணம் மூர்த்தி(45) ஆகியோர் பலத்த காயங்களுடன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ரம்யா அங்கு உயிரிழந்தார்.

இதனிடையே, காரைக்குடியில் இருந்து வந்த மற்றொரு கார், ஏற்கெனவே விபத்துக்குள்ளாகி இருந்த இந்த வாகனங்கள் மீது மோதியது. இருப்பினும், அந்தக் காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விபத்து தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *