மதுரை: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அருந்ததியருக்கான உள் இடஓதுக்கீட்டை திமுக காவு கொடுக்கக் கூடாது என ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் எச்சரித்துள்ளார்.
‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அருந்ததியர் இல்லாத பட்சத்தில் பிற சமூக மக்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற அரசாணை எண் 61-ஐ ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்’ போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில், மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஜக்கையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதிக்கு எதிரானது. ஆதிதிராவிட பிரிவு தலைவர்கள் ஒன்று திரண்டு தங்கள் வல்லமையை காட்டுகின்றனர்.
அருந்ததியர் மக்கள் அதிகார வாசனையைகூட நுகரவில்லை. அவர்கள் காலம் முழுக்க கக்கூஸ் கழுவ வேண்டுமா? தங்கள் பிள்ளைகள் படித்து உயர் பதவிகளுக்கு வரக் கூடாதா? அருந்ததியர் மக்களுக்கென திமுக அரசு கொண்டு வந்த உள் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் கடமை திமுக அரசுக்கு உள்ளது. திருமாவளவன் கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை திமுக காவு கொடுத்துவிடக் கூடாது. தமிழக முதல்வரை சந்தித்து இட ஒதுக்கீடு தொடர்பாக பேசுவோம்” என்று ஜக்கையன் கூறினார்.