“திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை” – ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து | EVKS Elangovan comments on Thirumavalavan statement about ruling power

1312464.jpg
Spread the love

ஈரோடு: “தமிழகத்தில் வாக்கு வங்கி வைத்துள்ள திருமாவளவன், ஆட்சியில் பங்கு என சொல்வதில் தவறில்லை. ஆனால், ஆட்சியில் பங்கு என்பது வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தியமாகாது,” என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பெரியார் பிறந்த வீடு நினைவகமாக மாற்றப்பட்டு, பெரியார், அண்ணா நினைவகம் என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள், அரிய புகைப்படங்கள், பெரியார் பயன்படுத்திய நாற்காலி, கைத்தடி உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி – மக்கள் தொடர்புத்துறையின் பராமரிப்பில் உள்ள பெரியார் – அண்ணா நினைவகத்தை, வார நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி, பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு அடக்கம், பணிவு தேவை. இவை இரண்டும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இல்லை. கோவையில் நடந்த ஜிஎஸ்டி தொடர்பான குறைதீர் கூட்டத்தில், ஜிஎஸ்டியை முறைப்படுத்த வேண்டும் என அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு இரவில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்து, அடுத்த நாள் மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது கேவலமானது.ஹோட்டல் உரிமையாளர் எழுந்து நின்று மன்னிப்பு கேட்டபோது, நிர்மலா சீதாராமன் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தார். மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் தன்மை அவருக்கு இல்லை.

இச்செயல் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள வணிகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களை பாஜகவுக்கு எதிராக திருப்பி உள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகள் மூட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கட்சியின் கருத்து இல்லை. மதுக்கடைக்கு பதில், கள்ளுக்கடை திறப்பதால், உடல் நிலை அவ்வளவாக பாதிக்க வாய்ப்பில்லை. பனை, தென்னை விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.சுதந்திரத்துக்கு முன்பு மது ஒழிப்பு போராட்டம் ஈரோட்டில்தான் தொடங்கியது. இன்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்பது லட்சியம் என கூறும்போது, தமிழகத்தில் வாக்கு வங்கி வைத்துள்ள திருமாவளவன், ஆட்சியில் பங்கு என சொல்வதில்லை தவறில்லை.

எல்லா கட்சிகளுக்கும், சீமானுக்கும் கூட அந்த ஆசை உண்டு. கையில் அதிகாரம் வேண்டும் என்பதற்காகத்தானே எல்லா கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், ஆட்சியில் பங்கு என்பது வரும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தியமாகாது. யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதைவிட, மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, மத வெறியர்களுக்கு தோல்வியை தர வேண்டும். அதுவே, திமுக, இண்டியா கூட்டணி கட்சிகளின் நோக்கம்.

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு, தொழில் வளத்தை ஈர்த்து வந்த முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் பற்றி பேசுவது சரியல்ல. அது பொறாமையின் வெளிப்பாடு. ராகுல் பற்றி பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தவறாக பேசுகிறார். அண்ணாமலை வெளிநாடு போனதால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி பெற்றவர். ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர். அவர் ஒரு காலாவதியானவர்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *