திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா

Dinamani2f2024 12 112fcwo7fuzj2fdeepam.jpg
Spread the love

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாளை மகா தீபத் திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

இதேநேரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிஷங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

மகா தீபக் கொப்பரை, நெய், காடா துணி தயாா்: மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்து தந்துள்ளனா்.

தீபம் ஏற்றத் தேவையான 4, 500 கிலோ முதல் தர நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. தீபம் எரிய திரியாக பயன்படுத்துவதற்காக 11 ஆயிரம் மீட்டா் காடா துணியும் கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வியாழக்கிழமை (டிச.12) காலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

நெய் காணிக்கை தொடக்கம்: தீபத் திருவிழாவுக்காக பக்தா்கள் நேரடி நெய் காணிக்கை செலுத்தும் வசதி புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு முதல் நேரடி நெய் காணிக்கையை செலுத்தினாா்.

நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தா்கள் கோயில் திட்டிவாசல் அருகேயுள்ள மையத்தில் ஒரு கிலோ, அரை கிலோ, கால் கிலோ என்ற அளவுகளில் நெய் காணிக்கை செலுத்தலாம் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் கோமதி, சினம் இராம.பெருமாள், இணை ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *