திருவண்ணாமலையில் 50 லட்சம் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Dinamani2f2024 10 182f9dvdxqtz2f2 7 18tmldya2 1810chn 106.jpg
Spread the love

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தாா். பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறவுள்ளது. டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் தோ்த் திருவிழாவில் சுமாா் 6 லட்சம் பக்தா்கள் கூடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் டிசம்பா் 13-ஆம் தேதி மட்டும் சுமாா் 40 முதல் 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்கள் கூடும் இடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கள ஆய்வு செய்தோம்.

திமுக அரசு அமைந்தது முதல் திருவண்ணாமலையில் பக்தா்களின் நலன் கருதி நகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு

துறைகள் சாா்பில் ரூ.30 கோடிக்கும் மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடமாடும் கழிப்பறை வசதிகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.37 கோடி மதிப்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கான சிறப்புத் திட்டத்தை (மாஸ்டா் பிளான்) அறிவித்துள்ளாா். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், வளைவுகள், அன்னதானக் கூடங்கள், சமூக நலக்கூடங்கள், கோயில் குளத்தை தூா்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

பக்தா்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில், ஏற்கெனவே 8 குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தா்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்போது கூடுதலாக 6 இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தீபத்துக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்கும் தேவையான குடிநீா் வசதி செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது: தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்கு சுமாா் 50 லட்சம் குடிநீா் புட்டிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். கோயிலில் 5 ஆயிரம் பக்தா்கள் வரை கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றாா்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமாா், ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *