திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காலை 6 மணிக்குமேல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், நாளை இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி நடக்கிறது.

இப்படியே, அடுத்த 10 நாள்களுக்கும் தீபப் பெருவிழா களைகட்டவிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி மகா ரத தேரோட்டம், டிசம்பர் 3-ம் தேதி காலை கருவறையில் பரணி தீபம், அன்று மாலை 2,688 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது. 4-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரையிலும் தெப்ப திருவிழா நடைபெறும். டிசம்பர் 7-ம் தேதி, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.