திருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது, இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்! | karthithigai deepam festival – tiruvannamalai getting ready for maha deepam

Spread the love

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம்.

அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம்.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் நவம்பர் 24- ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா” கோஷத்துடன் பரணி தீபத்தைத் தரிசனம் செய்தனர்.

பரணி தீபம், திருவண்ணாமலை.

பரணி தீபம், திருவண்ணாமலை.

காலையில், பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்காக தீபக் கொப்பரை மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மாலை அருணாசலேஸ்வரர், கொடிமரம் அருகே அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளிய சில நிமிடங்களில் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இன்று மகாதீபத்தைத் தரிசனம் செய்வதும் கிரிவலம் வருவதும் விசேஷம் என்பதால் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *