சென்னை: திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீப திருவிழா தொடங்குவதற்கு முன்பே கடந்த மாதம் 18-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி கிரிவலப் பாதையை ஆய்வு செய்தார். அம்மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நானும் மூன்று முறை கள ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம்.
அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் தலைமையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் பிரேமலதா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட 8 பேர் கொண்ட குழுவினர் கடந்த 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அந்த அறிக்கையில், “அதிகமான மனிதர்களை மலையின் மீது ஏற்றக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை பக்தர்கள் யாரும், மலையின் மீது ஏற அனுமதி கிடையாது. அதுதொடர்பான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் முறையாக வெளியிடுவார். அதேநேரம், மலை உச்சியில் தீபம் ஏற்ற மேலே கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள், 350 கிலோ கொண்ட திரி உள்ளிட்ட மற்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. முதல் நாளுக்கு தேவைப்படுகிற 40 டின் நெய், அதாவது ஒரு டின்னுக்கு 15 கிலோ என்றால் 600 கிலோ நெய்யை மேலே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
அதை எடுத்துச் செல்லும் நபர்களுக்குத் தேவையான உணவு, காவலர்கள், வனத்துறை உட்பட எவ்வளவு நபர்கள் செல்ல வேண்டும் என்று அறிக்கையில், அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தளவுக்கு மட்டுமே மனிதசக்தி பயன்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே இந்த தீபத்துக்காக, ஆவினிடமிருந்து 4500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.