‘‘திருவள்ளுவரின் கருத்தை பேசியவரை பயங்கரவாதியை போல் கைது செய்வதா?’’ – ஹெச். ராஜா கண்டனம் | H. Raja says that people with Dravidian principles cannot stop the growth of BJP

1307820.jpg
Spread the love

தென்காசி: திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலைகள் விஜிர்சன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக காவல்துறையின் அத்துமீறல்கள் எல்லை தாண்டி செல்கின்றன. கடந்த ஆண்டு சிலை வைக்கவில்லை, அதனால் அந்த இடத்தில் இந்த ஆண்டு சிலை வைக்கக் கூடாது என்கிறார்கள்.

மக்கள் உணர்வுகள் கூடக் கூட சிலைகள் எண்ணிக்கை கூடும். அதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? சிலைகள் வைப்பதை தடுப்பது ஜனநாயக விரோதமானது. மத உரிமைக்கு எதிரானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. கும்பகோணத்தில் கூடுதலாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீஸாரே எடுத்துச் சென்று கரைத்துள்ளனர். சீருடை அணியாமல், காவி துண்டு கட்டி, மதச் சின்னம் அணிந்துகொண்டு சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க தயாரா?. தமிழகத்தில் இந்து விரோத சக்திகளின் ஆட்சியில் அராஜகம் நடக்கிறது. இந்துக்கள் பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை.

திருச்செங்கோட்டில் சொன்னதை விட 2 அடி கூடுதலாக இருப்பதாக கூறி ஆட்சேபிக்கின்றனர். காவல்துறை இதுபோல் நடந்துகொள்ளக் கூடாது. கடையநல்லூரில் பாஜக கொடியை அகற்ற சொல்லியுள்ளனர். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் இதுபோல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் கருத்தியல் ரீதியாக இந்து மத சிந்தனைகளை பேசக்கூடாது என்கின்றனர். பள்ளியில் ஊக்கப்படுத்தும் உரையாற்ற அழைக்கப்பட்டவர் கர்மவினை குறித்து பேசியுள்ளார்.

திருமூலர், திருவள்ளுவர் சொன்னதை பேசியுள்ளார். அவரை பயங்கரவாதியை கைது செய்ததுபோல் கைது செய்துள்ளனர். அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கண்ணதாசன் எழுதிய வனவாசத்தை படித்தால் எவ்வளவு ஒழுக்கக்கேடானவர்கள் திராவிட தலைவர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். தமிழக கல்வி நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையை பேசியுள்ளார். 1,300 அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது.

ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள் உள்ள மோசமான நிலை ஏன் உள்ளது?. மக்கள் தனியார் பள்ளியில் சேர ஏன் ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்பது உண்மை. ஆளுநரை விமர்சிப்பது தவறு. பாஜக வளர்ச்சியை திராவிட கொள்கை உள்ளவர்களால் தடுக்க முடியாது. நீட் ஒழிப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என திராவிட சிந்தனை உள்ளவர்கள் பேசுவதையே விஜய் பேசுவது பாஜகவை பாதிக்காது. அதனால் திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் சிதறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *