சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு தெரிவித்ததாக விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் நிர்வாகியான ஆர்பிவிஎஸ்.மணியன் மீதான வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் கடந்தாண்டு செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கடசுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்தும், பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான செல்வம் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி மணியன் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக 15 சாட்சிகள், 34 ஆவணங்களுடன் 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.