திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி! | Kanyakumari gets a New Look for Thiruvalluvar Idol Silver Jubilee Festival!

1340280.jpg
Spread the love

நாகர்கோவில்: திருவள்ளுவர் சிலை அமைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் இணைப்புப் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரியின் சுற்றுலா மைய பகுதிகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இணை கூண்டு இணைப்பு பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பாலம் வருகிற ஜனவரி 1-ம் தேதி திறக்கப்படுகிறது. இதைப்போல் திருவள்ளுவர் சிலை அமைத்து 25-வது ஆண்டு நிறைவு வெள்ளி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்கள் வருகிற டிசம்பர் 31-ம் தேதியும், ஜனவரி 1-ம் தேதியும் நடைபெறுகிறது.

ஜனவரி 1-ம் தேதி இணைப்பு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவ்விழாக்களை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்கள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தி புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, முக்கோண பூங்கா, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பேரூராட்சியால் சீரமைத்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், கடலில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உடை மாற்றும் அறை வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய கல் படிக்கட்டுகளில் தினசரி காலை, மாலை வேளைகளில் பாசிகளை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தும் கன்னியாகுமரி பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு பின்புறமுள்ள இடத்தில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசி பராமரிப்புப் பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 15-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் இப்பகுதியிலேயே பணிபுரிந்து வருகிறார்கள். தொடர்ந்து திரிவேணி சங்கமம் பகுதியில் மெகா டூரிசம் 2010-2011 திட்டத்தில் ஆண், பெண் கழிப்பறை 20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

2019 – 2020 ஸ்வதேஷ் தர்சன் திட்டத்தில் உடை மாற்றும் அறை மற்றும் பொருள் பாதுகாப்பு அறையானது ரூ.84.97 லட்சம் மதிப்பீட்டிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.57.46 லட்சம் மதிப்பீட்டிலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளிப்பதற்காக படிக்கட்டு வசதி ரூ.108.50 லட்சம் மதிப்பீட்டிலும் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவுக்கான ஆம்பி தியேட்டர் மற்றும் திரிவேணி சங்கம பகுதியில் பாதிப்படைந்த சுற்றுலாப் பயணிகள் அமரும் இருக்கைகள் புதுப்பித்தல், சுனாமி பார்க் புதுப்பித்தல், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், மாற்றுத்திறனாளிகள் சாய்வுதளம், திரிவேணி சங்கமம் போகும் வழியிலுள்ள அலங்கார நீருற்று பராமரிப்பு செய்தல், காந்தி மண்டபம் எதிரே உள்ள முக்கோண பார்க் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. எனவே, கன்னியாகுமரி சுற்றுலாத் தளத்தினை உலக தரத்துக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *