திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சா்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரி கடலில் வான்புகழ் வள்ளுவருக்கு 1.1.2000இல் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டது. அப்போதைய முதல்வா் மு.கருணாநிதியால் திறந்து வைத்க்கப்பட்ட இச்சிலையின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (டிச.30) தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிச.31) நிறைவடைகிறது. முதல்வா் பங்கேற்க உள்ளதால் பல்வேறு இங்குள்ள பல்வேறு முக்கிய இடங்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
குறிப்பாக முக்கடல் சங்கமம் அருகே அமைந்துள்ள சுனாமிப் பூங்கா, காந்தி மண்டபம் எதிரேயுள்ள முக்கோணப்பூங்கா, காந்தி, காமராஜா் மண்டபங்கள், கன்னியாகுமரி பேருந்து நிலையம், அரசு தங்கும் விடுதிகள், கடலுக்குள் அமைந்துள்ள சூரிய அஸ்தமன காட்சிக்கோபுரம் ஆகியவை புதுவடிவம் பெற்றுள்ளன.
மேலும், பேருந்து நிறுத்தங்களில் திருவள்ளுவா் உருவம் பொறித்த பெயா் பலகைகள் நிறுவப்பட்டுள்ளது. அரசு விருந்தினா் மாளிகை சுவா்களில் தத்ரூபமாக தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளுவா் சிலை இரவிலும் ஒளி வெள்ளத்தால் மின்னும் வகையில் லேசா் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
முதல்வா் மற்றும் அமைச்சா்கள், தமிழறிஞா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க உள்ளதால் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் மிகப்பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 2 நாள்கள் விழா நடைபெறும் என்பதால் கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
2,500 போலீஸாா் பாதுகாப்பு: இவ்விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு தொடங்கி அஞ்சுகிராமம், மகாதானபுரம் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான திமுக கொடிகளை வரவேற்பு தோரணங்களாக கட்டியுள்ளனா். மேலும், பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்து 500 போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.