கூவம்… இன்று நதி அல்ல. சாக்கடைபோல மாறியிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இது மக்கள் பயன்படுத்திய புனித நதி. இதன் கரைகளில் நாகரிகம் செழித்து விளங்கியது. அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இதன் கரைகளில் அமைந்திருக்கும் ஆலயங்கள். ஆயிரம் ஆண்டுப் பழைமை வாயந்த ஆலயங்கள் பல கூவம் நதிக்கரையில் ஓரங்களில் உள்ளன. அவற்றுள் பராமரிப்பின்றி சிதைவுற்றுப் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆலயங்கள் பல. அப்படி வழிபாடு இல்லாமல் சிதைந்திருந்த ஆலயத்தை பத்தாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்துப் புதுப்பித்து வழிபாடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம் என்ற அற்புதப் பெயர்கொண்ட இந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது கேசாவரம். புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், கடம்பத்தூர் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து சாலை மார்க்கத்தில் பயணித்தால் புதுகேசாவரம் செக்போஸ்டை அடையலாம். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம்.

ஆதியில் இத்தலத்துக்கு, “மோக்ஷ த்வீபம்’ என்று பெயர். வடக்குநோக்கிப் பாய்கிற நதிகளுக்கு உத்திரவாகினின்னு பெயர். உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்கின்றன நம் புராணங்கள். அப்படி வடக்கு நோக்கிப் பாய்கிற கொசஸ்தலை ஆறு, ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப் புராணங்கள் போற்றும் வ்ருத்த க்ஷீரம் எனும் கூவம் நதி, கல்லாறு ஆகிய மூன்று நதிகளும் இந்தப் பூமியில் சங்கமிக்கின்றன.
அப்படிச் சங்கமிக்கும் இடத்தில் உருவானதே இந்த மோட்சத் தீவு. கங்கையே இங்கு மூன்று நதிகளாகிப் பாய்கிறது என்றும், இந்தத் தலம், ‘தட்சிணகாளகஸ்தி’ என்று சொல்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள்.