திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: எரிந்து நாசமான பெட்ரோல், டீசல் மதிப்பு முதல் ரயில் சேவை பாதிப்பு வரை | Thiruvallur train accident: Petrol, Diesel worth several crores burnt, services affected badly

1369260
Spread the love

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 வேகன்கள் தீக்கிரையாகின. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து இரு என்ஜின்களுடன் கூடிய 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில், வாலாஜா சைடிங்-க்கு புறப்பட்டது. தலா 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 வேகன்களில் பெட்ரோல், 45 வேகன்களில் டீசலுடன் புறப்பட்ட அந்த சரக்கு ரயில் அதிகாலை 4.55 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக இரு ரயில் இன்ஜின்கள், ஒரு வேகன் ஆகியவை தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், 49 வேகன்களில், 18 வேகன்கள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேகன்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில், ஒரு வேகனில் பற்றிய தீ, மளமளவென மற்ற வேகன்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பாதையில் செல்லும் உயர்நிலை மின் இணைப்பை உடனடியாக துண்டித்தார். விபத்தால் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், தீ விபத்தால் கடும் புகை கிளம்பியது.

தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், திருவள்ளூர், திருவூர், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. ரசாயனம் நுரை மற்றும் நீரால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 11 மணி நேரம் போராடி மாலை 4 மணிக்கு தீயை அணைத்தனர். இருப்பினும், 18 வேகன்களும் தீக்கிரையாகின. இதனால், அந்த வேகன்களில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் மற்றும் பெட்ரோல் எரிந்து நாசமானதாக தீயணைப்புத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள், ஏகாட்டூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன. சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், அரக்கோணத்தில் இருந்து வந்த 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கிய சரக்கு ரயிலில் இருந்து, தீயில் சிக்காத 32 வேகன்கள் மற்றும் ரயில் என்ஜின்களை அகற்றி, பாதுகாப்பாக வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, சேதமடைந்த இருப்பு பாதைகள் மற்றும் உயர்நிலை மின்சார கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணி மாலை 6 மணிக்கு மேலும் நீடித்தது. தமிழக ரயில்வே காவல் துறை ஏடிஜிபி தலைமையிலான 3 தனிப்படையினர் விபத்து குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

17524152152027

சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) சார்பில் காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ரயில் சேவை பாதிப்பு: சரக்கு ரயில் தீ விபத்தால், சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில் சேவை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் – மைசூருக்கு புறப்பட இருந்த வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவுரயில், சென்னை சென்ட்ரல் – கோவைக்கு புறப்பட இருந்த கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

காச்சிகுடா – செங்கல்பட்டு விரைவு ரயில் உள்பட 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி, 77 விரைவு ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இவற்றில், 16 விரைவு ரயில்கள் ரத்து, 26 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியது ஆகியவை அடங்கும். மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்க்க, விசாரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவிட்டுள்ளார்,

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *