திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மகள் சிரிஷா (19). இவர் திருப்பதியில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அதனால் சிரிஷாவுக்குத் திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்தத் திருமணத்தில் சிரிஷாவுக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சிரிஷா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலைத் தெரிந்த சிரிஷாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியை மீட்டு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி சிரிஷா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிரிஷாவின் மரணம் குறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவி சிரிஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எண்ணம் தவறானது. தற்கொலை செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும்.