திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்… இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் திருமணம் நடந்தது. கௌசல்யாவும் ராஜேசும் உறவினர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தார். கடந்த 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொத்தனார் வேலைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, சமையலறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

திருமண கோலத்தில் கௌசல்யா, ராஜேஷ்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் கௌசல்யாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கௌசல்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கௌசல்யா மரணம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸார், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கௌசல்யாவின் சடலத்தைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் பொன்னேரி போலீஸார், ராஜேஷிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். இந்தச் சமயத்தில்தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் கௌசல்யா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள், போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையிலான போலீஸார், ராஜேஷிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய மனைவி கௌசல்யா, சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி இறந்துவிட்டதாகவே கூறினார். அதை நம்பாத போலீஸார், கால் வழுக்கி கீழே விழுந்திருந்தால் எப்படி முகத்தில் நகக்கீறல் ஏற்படும் என அடுத்த கேள்வியை ராஜேஷிடம் கேட்டனர். அதோடு அந்த நகக்கீறலுக்கு காரணம் நீதான் என்று ஆதாரத்துடன் கூற ராஜேஷ், தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தீபிகா

இதுகுறித்து பொன்னேரி போலீஸார் கூறுகையில்,

“கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ், செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த தீபிகா என்கிற லோகேஸ்வரியுடன் (21) நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். ராஜேசும் தீபிகாவும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இவர்களின் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுடன் ராஜேஷுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதனால் தீபிகாவுடன் பேச முடியாமல் ராஜேஷ் சிரமப்பட்டிருக்கிறார். எனவே கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டமிட்டிருக்கிறார். அதை தீபிகாவிடமும் கூறி ஆலோசித்திருக்கிறார். இதையடுத்துதான் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதைப் போல சென்ற ராஜேஷ், யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மனைவி கௌசல்யா சோபாவில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த ராஜேஷ், மனைவி கௌசல்யாவின் மூக்கை பொத்தி கழுத்தை நெரித்திருக்கிறார். அப்போது கௌசல்யா, போராடியதில் அவரின் முகத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயைடுத்து கௌசல்யாவின் தலையை டைல்ஸ் தரையில் மோதி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜேஷ். அதைத் தொடர்ந்து சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி கௌசல்யா உயிரிழந்ததைப் போல செட்டப் செய்த ராஜேஷ், கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக வெளியில் சென்றுவிட்டார். ஆனால் நகக்கீறலால் ராஜேஷ் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இந்தக் கொலைக்கு தீபிகாவும் உடந்தை என தெரியவந்ததால் அவரையும் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *