பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம்.
குறிப்பாக நிலப்பிரச்னை உள்ளவர்கள், சொந்த வீடு வாங்க வேண்டுபவர்கள், செல்வமும் செழிப்பும் நிறைந்த வாழ்வை விரும்புபவர்கள் வராகப் பெருமானை வழிபட்டால் வேண்டும் அனைத்தையும் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி வேண்டுபவர்களுக்கு அருளும் வராக சுவாமி கோயில் கொண்டிருக்கும் தலமாகத் திகழ்கிறது மேல்பொதட்டூர்பேட்டை.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி.
இரண்டாம் நரசிம்மராயருக்கு வேட்டையில் பிரியம் அதிகம். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட்டை மும்முரத்தில், மாலை மயங்கி இருள் படரத் தொடங்கியதை அரசர் கவனிக்கவில்லை. எனவே, அன்று இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்துக்கொண்டு மன்னரும் பரிவாரங்களும் தங்கினர்.
இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப் பகுதியில், நறுமண மலர்களின் வாசத்தில் தோய்ந்து வந்த தென்றலின் சுகமான ஸ்பரிசத்தில் லயித்திருந்தார் மன்னர். அப்போது அவரின் பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது.

வேட்டை நாய் ஒன்று ஒரு முயலைத் துரத்தியது. உயிர்ப்பிழைத்தால் போதும் என்று முயல் அதிவேகமாகப் பாய்ந்தோட, வேட்டை நாயும் வேகமாக முயலைத் துரத்திச் சென்றது. அதைப் பார்த்த மன்னரின் மனதில், என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தனது குதிரையில் ஏறி வேகமாகப் பின்தொடர்ந்தார்.
வேட்டைநாயின் வேகத்துக்கு முயலால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓர் இடத்தில் களைப்புற்று நின்றுவிட்டது. பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை… அருகிலிருந்த புற்றினை மூன்று முறை வலம் வந்தது. பிறகு தனது முழு வலிமையையும் ஒன்று திரட்டி, வேட்டை நாயின் மீது பாய்ந்தது. முயலின் திடீர் ஆவேசத்தைக் கண்டு மிரண்ட வேட்டை நாய், வந்த வழியே ஓடிச் சென்றுவிட்டது.
இந்தக் காட்சியைக் கண்ட மன்னருக்கு வியப்பு தாளவில்லை. முயலின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்துப்போனவராகத் தன் குடிலுக்குத் திரும்பினார்.