திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த தீபாவளி தொடங்கி தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அறுவடை செய்யும் நிலையிலிருந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் வயல்வெளிகளிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாத காரணத்தால், கொள்முதல் நிலையங்களில் வாசல்களிலேயே விவசாயிகளின் தற்போதைய குறுவை அறுவடை நெல் கொள்முதல் செய்யாமல் செயற்கையாக தேக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் விவசாயிகளின் நெல் தொடர் மழையில் நனைந்து குவியல், குவியல்களாக கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அதுபோல், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நடவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆன இளம் சம்பா பயிர்களில் பெரும்பாலான நெற்பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்திக்கவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களையும், மழை நீரால் சூழப்பட்டுள்ள இளம் சம்பா சாகுபடி பயிர்களை பார்வையிடவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான கே. பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் பார்வையிட்டு விவசாயிகளையும் சந்தித்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் உள்ளார். இதற்காக இன்று காலை வடுவூர், செருமங்கலம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்த பின்னர், திருவாரூரில் செய்தியாளர்களை இன்று மதியம் சந்திக்க உள்ளார்.