முகப்பின் ஒரு பக்கத்தில் விநாயகர். மறு பக்கத்தில் முருகர்; மயில் மீது அமர்ந்தவராக, கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டபடி காட்சி தருகிறார். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை; தெற்குப் பகுதியில் மாத்திரம் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்வாயிலுக்குச் செல்லும் பாதையில் பலிபீடம்; நந்தி. இந்தப் பாதைக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது. ஒற்றைமாட கோபுரம் கொண்டிருக்கும் உள் வாயிலைக் கடந்து சென்றால், உள்பிராகாரத்தை அடைந்து விடலாம்.
பிராகாரம் மிக அழகு. தென்மேற்கு மூலையில், சித்தி விநாயகர் சந்நிதி. மூலவர் கருவறைக்கு நேர் பின்புறம் ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி. வடமேற்கு மூலையில் வள்ளி – தெய்வானை சமேத மயிலேறு சுப்பிரமணியர் சந்நிதி. இவர் நான்கு திருக்கரங்களுடன் அபயமும் ஊரு ஹஸ்தமும் தாங்கியவராக தரிசனம் தருகிறார். வடக்குத் திருச்சுற்றில் கிணறு. இந்தச் சுற்றில் வலம் வரும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலம் வந்துவிடலாம்.

வடக்குச் சுற்றில் வந்து, மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், தனிக் கோயிலாக அருள்மிகு பைரவர் சந்நிதி. தெற்கே பார்த்த பைரவர்; நாய் வாகனத்துடனும் சாந்தமான திருவதனத்துடனும், அளவில் பெரியவராக நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் மூலவரைப் பார்த்தபடி, ஒரு பக்கத்தில் பதஞ்சலி முனிவர்; இன்னொரு பக்கத்தில், சூரியன், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் அருள்கின்றனர்.
பதஞ்சலி இருந்தால், பக்கத்திலேயே வியாக்ரபாதரும் இருப்பார் எனும் வகையில், மண்டபத்தில் வியாக்ர பாதர் உருவம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் நின்று ஒருசேர சுவாமியையும் அம்பாளையும் தொழலாம். அம்பாள் சந்நிதிக்கு அருகில் நடராஜ சபை.