திரையரங்க பராமரிப்பு கட்டணம் உயர்ந்தாலும் டிக்கெட் விலை உயராது: திருப்பூர் சுப்பிரமணியம் | theatre maintenance fees hike not impact ticket price Tiruppur Subramaniam

1344593.jpg
Spread the love

திருப்பூர்: திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதால், டிக்கெட் கட்டணம் உயராது என, திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று (டிச. 25) செய்தியாளர்களிடம் கூறும்போது, “திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு, ரூ.2-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஏ.சி., திரையரங்குகளுக்கு ரூ.4-லிருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும் என, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கான பராமரிப்பு செலவாக ரூ.2-லிருந்து ரூ.3 ஆக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், ஏ.சி., திரையரங்குகளுக்கு ரூ.4-லிருந்து ரூ.6 ஆக பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி.

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மேலும், இந்த பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டதால் திரையரங்கு டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதிகபட்ச கட்டணமாக ரூ.190 தொடரும். மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருந்த சூழலில், தற்போது பாப்கார்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது ஏற்புடையதல்ல.

குழந்தைகள் விரும்பி உண்ணும் பாப்கார்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக எங்கள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசு உடனடியாக இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். குழந்தைகள் சாப்பிடும் பொருளுக்கு 18 சதவீதம் வரி என்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. மத்திய அரசு இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *