இந்திய அணியில் இனிவரும் காலங்களில் 3-வது வீரராக திலக் வர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கி முத்திரை பதித்தவர் விராட் கோலி. அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பின், இந்திய அணியில் மூன்றாவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சோதனை முயற்சியில் களமிறக்கப்பட்டனர். டி20 உலகக் கோப்பைத் தொடரிலேயே ரிஷப் பந்த், 3-வது வீரராக சோதனை முயற்சியில் களமிறக்கப்பட்டார். இருப்பினும், இந்த வீரர்கள் அனைவரும் 3-வது வீரராக பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அந்த இடத்துக்கு பொருத்தமான நபராக உருவெடுத்தார் சூர்யகுமார் யாதவ்.
இதையும் படிக்க: இந்தியாவின் மிகப் பெரிய கவலை கௌதம் கம்பீர்தான்: முன்னாள் ஆஸி. கேப்டன்
வாய்ப்பளித்த சூர்யகுமார் யாதவ்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 3-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கடைசி இரண்டு போட்டிகளில் அந்த இடத்தில் திலக் வர்மா விளையாட வாய்ப்பளித்தார். தனக்கு 3-வது இடத்தில் களமிறங்க வாய்ப்பளிக்குமாறு திலக் வர்மா கேட்டுக் கொண்டதையடுத்து, தனது இடத்தில் திலக் வர்மா களமிறங்க சூர்யகுமார் பெருந்தன்மையுடன் வாய்ப்பளித்தார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட திலக் வர்மா, தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் 3-வது இடத்தில் களமிறங்கி சதம் விளாசிய நிலையில், எதிர்காலத்திலும் அவர் 3-வது வீரராக களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: “பெருமை கொள்கிறேன்…” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
3-வது இடத்தை விட்டுக் கொடுக்கிறாரா?
திலக் வர்மா 3-வது வீரராக களமிறங்கி விளையாடுவது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: ஒருகாலத்தில் இந்திய அணிக்காக 3-வது வீரராக களமிறங்கி ஒருவர் தொடர்ச்சியாக அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்ற விஷயம் எனது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதனால், இளம் வீரர் திலக் வர்மாவுக்கு 3-வது வீரராக களமிறங்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த இடத்தில் நம்பமுடியாத விதத்தில் மிகவும் அதிரடியாக விளையாடினார். டி20 போட்டிகளில் மட்டுமல்லாமல், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் திலக் வர்மா, இந்திய அணிக்காக தொடர்ந்து 3-வது வீரராக களமிறங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
திலக் வர்மா விருப்பம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இது நம்பமுடியாத விதமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. எதிர்காலத்தில் இந்திய அணிக்காக 3-வது வீரராக களமிறங்குவேனா, மாட்டேனா என்பது எனது கைகளில் இல்லை. சூர்யகுமார் யாதவ் எனக்கு 3-வது வீரராக களமிறங்க வாய்ப்பளித்தார். அணியின் தேவைக்கேற்ப செயல்பட்டு சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். 3-வது வீரராக களமிறங்கி விளையாடுவதை விரும்புகிறேன். ஆனால், எந்த ஒரு இடத்திலும் களமிறங்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.