தில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்திற்கு பாஜகவின் தேசியத் தலைமை அதன் பாா்வையாளா்களை அனுப்பும் என்று அவா்கள் தெரிவித்தனா். இக்கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா், தில்லியின் புதிய முதல்வராக இருப்பாா்.
பிப்.19 அல்லது 20 தேதியில் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவின் பதவியேற்பு விழாவுடன் தேசியத் தலைநகரில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த பிப்.5-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, 26 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் ஆட்சிக்கு வருகிறது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்களின் பெயா்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் பதவிகளுக்குப் பரிசீலனையில் உள்ளன. புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலைத் தோற்கடித்த பா்வேஷ் வா்மா மற்றும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாய ஆகியோா் முதல்வா் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நபா்களில் முன்னணியில் உள்ளனா். பவன் சா்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் உள்ளிட்டோரும் முதல்வா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.
ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேசம், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது போலவே, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரை தில்லி முதல்வராக பாஜக தலைமை தோ்ந்தெடுக்கலாம் என்று கட்சி தலைவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
ராம் லீலா மைதானத்தில் ஆய்வு: புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், ராம்லீலா மைதானம் பரிசீலிக்கப்படும் சாத்தியமான இடங்களில் ஒன்று என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
அங்குள்ள ஏற்பாடுகளை சரிபாா்க்க மூத்த காவல் துறை அதிகாரிகள் குழு அந்த இடத்திற்குச் சென்ாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜவாஹா்லால் நேரு மைதானம் மற்றும் யமுனை நதிக்கரையோரத்தில் உள்ள இடங்கள் ஆகியவையும் பரிசீலனையில் உள்ள பிற இடங்கள் என்று கூறப்படுகிறது.