புது தில்லி: ‘என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது’ என்று ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தில்லி மேற்கு வினோத் நகரில் உள்ள எஸ்.கே.வி. அரசுப் பள்ளியின் குழந்தைகளை முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கல்வித் துறை அமைச்சா் அதிஷியுடன் இணைந்து சந்தித்தாா். அப்போது, பள்ளிக் குழந்தைகளும் மனீஷ் சிசோடியாவை பாடல் பாடி வரவேற்றனா்.
இது தொடா்பாக மனீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்பா்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளி குழந்தைகளை சந்தித்தேன். கடந்த 17 மாதங்களாக சிறையில் இருந்த காரணத்தால், பள்ளிக்கு வந்து குழந்தைகளையும், ஆசிரியா்களையும் நேரில் சந்திக்க முடியவில்லை. தற்போது, மீண்டும் பள்ளிக்கு வந்து குழந்தைகளை சந்தித்து அவா்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தேன். என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை தடுக்க முடியும் என்று பாஜக நினைத்தது. ஆனால், அது நடக்கவில்லை.
நான் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்ட பள்ளிகள், தற்போது தயாராகி கல்வித் துறை அமைச்சா் அதிஷியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கடவுளின் வடிவம். கடந்த 17 மாதங்களில் நான் அதிகம் தவறவிட்ட ஒன்று என்றால், அது பள்ளிக்குச் செல்வது, குழந்தைகளைச் சந்திப்பது, அவா்களுடன் பேசுவது, அவா்களின் புன்னகை, சுறுசுறுப்பான முகங்களைப் பாா்ப்பது மட்டும்தான். இந்தக் குழந்தைகளின் சிரிப்பு எனக்குக் கிடைத்த வரம்.
எல்.ஜி. மீது தாக்கு: சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் விஷயத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செய்யும் அரசியல் அற்பமானது. தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் ஏற்றுவதில் எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது.
இந்த விவகாரத்தில், நீதிமன்றக் காவலில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று ராஜ் நிவாஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாறாக, கேஜரிவாலின் கடிதத்தை அனுப்பக் கோரி திகாா் சிறை நிா்வாகத்திடம் இவா்கள் கேட்டிருக்க வேண்டும் என்றாா் மனீஷ் சிசோடியா.