பாபா சித்திக் கொலை, நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மும்பையின் பாந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதால் மகாராஷ்டிரத்தில் உள்ள மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தில்லியிலும் கிட்டத்தட்ட இதே சூழலைத்தான் உருவாக்கியுள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் குண்டர்களின் ஆட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள். பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக நிற்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாபா சித்திக் கொலை: மருத்துவமனையில் குவிந்த பிரபலங்கள்! போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
பாபா சித்திக் கொலை
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது மகனும் எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தொடர்ந்து, அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜீத் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ், பாபா சித்திக்கின் நெருங்கிய நண்பர்களான சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா செட்டி, ஜாஹீர் இக்பால் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் மருத்துவமனைக்கு நள்ளிரவில் வருகை தந்தனர்.
மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா்.